சென்னையை அடுத்த பரந்தூரில் அமையவுள்ள புதிய பன்னாட்டு கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிடவோ, மாற்றியமைக்கவோ அல்லது திரும்பப் பெறவோ எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசுக்கு வரவில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.
திமுக எம்.பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் தொடர்பாக 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று TIDCO நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு இத்திட்டத்தை திரும்பப் பெறுவது, மாற்றுவது அல்லது கைவிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தவிதமான தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவதாக தமிழக அரசிடம் இருந்து எந்தவொரு கோரிக்கையோ அல்லது கடிதமோ மத்திய அரசுக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை அமைச்சர் தனது பதிலில் உறுதிப்படுத்தினார்.
இந்த முக்கியத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகள், சுற்றுச்சூழல் மற்றும் பிற தேவையான சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுதல், அத்துடன் திட்டத்திற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுதல் போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வது உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் திட்டத்தை முன்மொழிந்த தமிழ்நாடு அரசைச் சாரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நிலம் கையகப்படுத்துதல், தேவையான அனுமதிகளைப் பெறுதல் மற்றும் நிதி நிலைமையை நிறைவு செய்தல் போன்ற முக்கியக் காரணிகளைப் பொறுத்தே திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கான காலக்கெடு அமையும் என்றும், இதுவரையில் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். இதனால், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
