தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, முதல்வர் விஜய்யின் 'தவெக' அரசுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, இந்த பட்ஜெட்டை 'புஸ்வாண பட்ஜெட்' என கடுமையாக சாடியுள்ளார். "சிறந்த பட்ஜெட்டை அறிவிப்போம் என முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூறிய நிலையில், பட்ஜெட்டில் எந்தவித புதிய அறிவிப்புகளும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்வதே தவெக அரசின் வேலையாக உள்ளது," என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், "தவெக ஆட்சி அமைந்து 85 நாட்கள் ஆகின்றன. இதுவரை எந்தவொரு பொதுத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. வசனம் பேசுவதிலும், ரீல் விடுவதிலும் மட்டுமே நாட்கள் கடந்துவிட்டன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வீர வசனம் பேசினர். ஆனால், நிதிநிலை அறிக்கையில் எந்த திட்டமும் இடம்பெறவில்லை. தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை," என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சட்டமன்றத் தேர்தலின்போது, முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000, விவசாய பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என பல வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், இதில் பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்றும், சிறிய அளவிலேயே பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறிவிட்டு, அதைச் சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என விளக்கம் அளிக்கவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் நிதி ஆதாரத்தைப் பெருக்க நிபுணர் குழு அமைப்பதாகக் கூறி, ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள். அதேபோல், தற்போது தவெக அரசு நிதி நிலையைச் சரிசெய்ய நிபுணர் குழு அமைப்பதாகக் கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியம்?" என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
"தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் குறுகிய காலத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். 10 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள் என்ற விளக்கமும் இல்லை. கடன் வாங்கி மட்டுமே திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலை உள்ளது. அளவுக்கு மீறி கடன் பெற்றால் மாநில அரசின் நிலைமை என்னவாகும்? அதிமுக ஆட்சிக் காலத்தில் திறமையான அரசாக நடைபெற்றது. இன்றைய பட்ஜெட்டுக்கு மதிப்பெண் தர வேண்டும் என்றால் பூஜ்ஜியம் தான் தரலாம்," என அவர் தனது விமர்சனத்தை முடித்தார்.
மறுபுறம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட், 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படி தான் உள்ளது. இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ரிமேக் வெர்ஷன் பட்ஜெட்" என கருத்து தெரிவித்துள்ளார்.
"விவசாயிகள் பிரச்சனை, மின் கட்டணக் குளறுபடி, விலைவாசி உயர்வு என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட் இது. வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறிவிட்டு, அதைச் சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று விளக்கம் அளிக்கவில்லை. ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் பட்ஜெட்டில் மூச்சே விடவில்லை," என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
"மொத்தத்தில், சொந்தமாக யோசிக்காத, சொன்னதைச் செய்யாத, சுற்றில்லாத, 'ரீல் அரசின்' முதல் பட்ஜெட் இது," என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
