சென்னையில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளில், சுங்கக்கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த உத்தரவால், வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, சென்னை பை-பாஸ் சாலையில் அமைந்துள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில், அனைத்து வகை வாகனங்களுக்கான கட்டணமும் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்குள் இது இரண்டாவது முறையாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய கட்டண உயர்வு நடுத்தர குடும்பங்களையும், வாடகை கார் ஓட்டுநர்களையும் மேலும் பாதிக்கும் என லாரி மற்றும் டாக்ஸி உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒரு முறை கட்டணக் குறைப்பு ரத்து செய்யப்பட்டு, பல தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மே மாதத்திற்குப் பிறகு இது இரண்டாவது கட்டண உயர்வாகும். இதனால், வாகனங்களின் வகையைப் பொறுத்து, 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு அனைத்து சுங்கச்சாவடிகளிலும் படிப்படியாக அமல்படுத்தப்படும்.
மேலும், சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் 350 ரூபாயிலிருந்து 360 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
