தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. இலவச அரிசி மற்றும் மானிய விலையில் வழங்கப்படும் இதர பொருட்களை தொடர்ந்து பெறுவதற்கு, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது e-KYC விரல்ரேகை பதிவை ஜூலை 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை தங்களது விரல்ரேகைப் பதிவை மேற்கொள்ளாத ரேஷன் கார்டுதாரர்கள், உடனடியாக தங்களது ரேஷன் கார்டுடன் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று இந்த முக்கியப் பணியை முடிக்க வேண்டும். குறிப்பாக, பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள், தாங்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் சென்று தங்களது கைரேகைப் பதிவை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது பெயர்களை ஜூலை 25 ஆம் தேதிக்குள் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து நீக்கம் செய்ய வேண்டும். இந்த காலக்கெடுவிற்குள் பெயர்களை நீக்க முடியாதவர்கள், தங்களது பகுதியில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினரின் குடும்ப அட்டை எண்ணுடன், அவரது ஆதார் கார்டின் நகலை வழங்க வேண்டும்.
கைரேகை பதிவு செய்ய முடியாத குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு. இவர்களது ஆதார் கார்டில் உள்ள கைரேகை மற்றும் கண் பதிவை முதலில் புதுப்பித்த பின்னரே, ரேஷன் கடைகளில் e-KYC பதிவை மேற்கொள்ள முடியும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூத்த குடிமக்கள், உடல்நலக் குறைபாடு அல்லது வேறு ஏதேனும் இயலாமை காரணமாக ரேஷன் கடைகளுக்கு நேரில் வர முடியாதவர்கள், இது குறித்து சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளரைத் தொடர்புகொள்ளலாம்.
இல்லம் தேடி வரும் வசதி: ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத பயனாளிகளுக்கு, விற்பனையாளர்கள் அவர்களது இல்லங்களுக்கே நேரில் வந்து பயோமெட்ரிக் சரிபார்ப்புப் பணியை நிறைவு செய்து தருவார்கள். இந்த சிறப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
போலி ரேஷன் கார்டுகளைத் தடுப்பதற்கும், தகுதியற்ற நபர்களை நீக்குவதற்கும் இந்த e-KYC விரல்ரேகை பதிவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக விரல்ரேகை பதிவு செய்தல் மற்றும் இறந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல் போன்ற பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். AAY மற்றும் PHH பிரிவுகளைச் சேர்ந்த ரேஷன் அட்டை பயனாளிகள், எந்தவித பிரச்சனையும் இன்றி தொடர்ந்து பலன்களைப் பெற இந்த பணிகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
