செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்த வீரா என்ற வீராசாமி, சாலை அமைக்கும் பணிக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இணையதளத்தில் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
சாலை ஒப்பந்ததாரரான நவீன் என்பவர், வீராசாமி தன்னை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பெற்றதாக தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வீராசாமியை கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை ஜூலை 29ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
நடந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் நவீன் என்பவர், ரூபாய் 9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டு பணிகளை நிறைவு செய்தார். இருப்பினும், அவர் மேற்கொண்ட பணிக்கான ரசீதுகளுக்கு ஒப்புதல் கிடைக்காததால், த.வெ.க ஊராட்சி மன்ற தலைவரும், அக்கட்சியின் மாவட்ட இணை செயலாளருமான வீராசாமியை அணுகினார்.
ஜூலை 8ஆம் தேதி, நவீன் வீராசாமியின் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று பேசியபோது, ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.9.80 லட்சம் மட்டுமே என்றும், அதில் ரூ.1 லட்சம் கொடுத்தால் தனக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் நவீன் கூறியதாகவும், பின்னர் ரூ.70 ஆயிரம் வரை தருவதாக பேரம் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், வீராசாமி ரூ.1 லட்சம் கேட்டு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, நவீன் முதல் தவணையாக ரூ.50 ஆயிரத்தை வீராசாமியின் ஜி-பே கணக்கிற்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் பிறகு, ஜூலை 10ஆம் தேதி மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை கொடுக்கச் சென்றபோது, வீராசாமி ரூ.1 லட்சம் போதாது, ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இறுதியாக ரூ.1.30 லட்சம் கொடுக்க நவீன் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஊராட்சி மன்ற கிளர்க்கை தொடர்பு கொண்டு உடனடியாக ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்யுமாறு வீராசாமி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி வீராசாமியின் ஜி-பேவிற்கு ரூ.50,000 அனுப்பப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.30 ஆயிரம் பணத்தை ஊராட்சி மன்ற தலைவரின் அலுவலகத்தில் வைத்து வீராசாமியிடம் நவீன் கொடுத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த லஞ்சம் வாங்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் வாங்கிய சர்ச்சையில் சிக்கியுள்ள வீராசாமி மீது, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முறைகேடு செய்ததாக வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில், அவரது காசோலை அதிகாரம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2025ஆம் ஆண்டு மே மாதம் 6 வார்டு உறுப்பினர்கள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் அவரது தலைவர் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும், வீரா சென்னை நீதிமன்றத்தை நாடி, சுமார் 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
