கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு இரவு பகலாக உழைத்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்கு, அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறை என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
'கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு அரசு வேலை' என்ற தவறான எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும், சிறிய சொத்து தகராறுகளுக்குக் கூட குடும்பங்களுக்குள் மர்ம மரணங்கள் நிகழும் சூழலில், அரசு வேலை என்ற அரிய வாய்ப்பை தவறான முறையில் பெற வேண்டும் என்ற சிந்தனையை சிலரிடம் தூண்டக்கூடிய ஆபத்தான முன்னுதாரணமாக இது மாறிவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் அல்லது எதிர்பாராத வகையில் நடைபெறும் பிற துயரச் சம்பவங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அவற்றின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கும் கொள்கையை அரசு பின்பற்றுமா? இல்லையெனில், இந்தச் சம்பவத்திற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது? என்ற நியாயமான கேள்விகளுக்கும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல என்றும், திறமை, தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமை என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
