இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சார்ஜிங் மற்றும் ரேஞ்ச் குறித்த வாடிக்கையாளர்களின் கவலைகளைப் போக்கும் வகையில், புதிய பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) எஸ்யூவி கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்த புதிய வகை கார்கள், மின்சார வாகனங்களின் குறைந்த விலை மற்றும் பெட்ரோல் கார்களின் நீண்ட மைலேஜ் ஆகிய இரண்டின் நன்மைகளையும் ஒருங்கே பெற விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. JSW, MG மோட்டார்ஸ் மற்றும் BYD போன்ற முன்னணி நிறுவனங்கள், சுமார் 1200 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய ரேஞ்ச் வழங்கும் புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.
இந்த கார்கள் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், இரண்டு மின் மோட்டார்கள் மற்றும் ஒரு பெரிய பேட்டரி பேக் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கலவையானது, வாகனங்களுக்கு அசாதாரணமான செயல்திறனையும், நீண்ட தூர பயணங்களுக்கான நம்பகத்தன்மையையும் வழங்கும்.
BYD Seal U (பிஒய்டி சீல் யு) மாடல், பிஒய்டி நிறுவனத்தின் 'ஓஷன் ஏஸ்தெட்டிக்ஸ்' டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறத்தில் அழகிய C-வடிவ எல்.இ.டி ஹெட்லைட்டுகள், ஸ்போர்ட்டியான பம்ப்பர்கள் மற்றும் பக்கவாட்டில் 19 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை இதன் கவர்ச்சியை கூட்டுகின்றன. காரின் உட்புறம் பிரீமியம் தரத்தில், 6 இன்ச் சுழலும் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் இரண்டு வயர்லெஸ் சார்ஜிங் பேடுகள் போன்ற நவீன வசதிகளுடன் அமைந்துள்ளது.
பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் பேட்டரி ஆகிய இரண்டும் இணைந்து செயல்படும் பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் மூலம், BYD Seal U ஒட்டுமொத்தமாக 1200 கிலோமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை வழங்குகிறது. இது நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
JSW மோட்டார்ஸ் கூட்டணியில் MG நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள ஸ்டார்லைட் எஸ்.யு.வி, சிறப்பான ஏரோடைனமிக் தோற்றத்துடன் வருகிறது. கூர்மையான எல்.இ.டி டே-டைம் ரன்னிங் லைட்டுகள், அகலமான முன்புற கிரில் மற்றும் நேர்த்தியான பின்புற வடிவமைப்பு ஆகியவை இதன் வெளிப்புறத்தை ஈர்க்கும் வகையில் மேம்படுத்துகின்றன. உட்புறம் எளிமையான அதேசமயம் நவீன மினிமலிஸ்ட் வடிவமைப்பில், டேஷ்போர்டில் பெரிய ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் ADAS எனப்படும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
முழுமையாக பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு, எரிபொருளும் நிரப்பப்பட்ட நிலையில், இந்த MG Starlight கார் அதிகபட்சமாக 1100 முதல் 1200 கி.மீ வரையிலான ரேஞ்சை வழங்கும் திறன் கொண்டது. இது அன்றாட பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்கள் இரண்டிற்கும் போதுமானதாக இருக்கும்.
இவை தவிர, MG new Starlight 560, JSW மோட்டார்ஸ் Jetour T2, மற்றும் BYD லெப்பார்ட் 8 போன்ற மாடல்களும் பிளக்-இன் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. எரிபொருள் மற்றும் பேட்டரி இரண்டிலும் இயங்கும் இந்த வாகனங்கள், சார்ஜிங் நிலையங்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தைக் குறைத்து, நீண்ட தூர பயணங்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும். இந்த கார்களை வீட்டிலும் சார்ஜ் செய்யலாம், மேலும் சார்ஜிங் ஸ்டேஷன்களிலும் சார்ஜ் செய்துகொள்ளலாம். எலக்ட்ரிக் மோடில் நீண்ட நேரம் இயங்கும் இந்த கார்கள், பேட்டரி குறைந்தவுடன் தானாகவே பெட்ரோல் என்ஜினுக்கு மாறி இயங்கத் தொடங்கும்.
