டாஸ்மாக் ஊழியர்களிடம் கலந்தாலோசிக்காமல், அவர்களின் ஊதியத்தை அரசு தன்னிச்சையாக உயர்த்தியதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர், டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஊதியத்தை 25 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிவிப்பு, தொழிற்சங்கங்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதால், ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் கடந்த 23 ஆண்டுகளாக தொகுப்பூதியம் என்ற பெயரில் மிகக் குறைந்த ஊதியத்தைப் பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். அதே சமயம், அரசுக்கு சொந்தமான அமுதம் அங்காடிகள், நியாயவிலை கடைகள், ஆவின் பாலகங்கள், கோஆப்டெக்ஸ் துணி கடைகள் போன்ற பிற விற்பனைப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் பஞ்சப்படி மற்றும் காலமுறை ஊதியம் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு தனது சொந்த நிறுவன ஊழியர்களிடையே இந்த பாகுபாடு காட்டும் அணுகுமுறையை சரிசெய்ய வேண்டும் என முந்தைய ஆட்சிகளிடமும் வலியுறுத்தப்பட்டதாகவும், ஆனால் தொகுப்பூதியத்தில் சிறிய உயர்வை மட்டுமே அவ்வப்போது அறிவித்ததாகவும் திருச்செல்வன் தெரிவித்துள்ளார். தற்போதைய திமுக அரசும் அதேபோன்ற தொகுப்பூதிய உயர்வை அறிவித்துள்ளது, இது ஊழியர்களின் வாழ்க்கைச் செலவினங்களை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை என்பதை அரசு உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஊதிய உயர்வு கூட, ஊழியர்களின் பணி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், மாறாக, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தவிர்க்க வேண்டும் என்ற அமைச்சரின் நோக்கமாகவே இது அமைந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசின் பிற நிறுவனங்களில் 23 ஆண்டுகள் பணிபுரிந்தால், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் இதர பணப்பயன்கள் கிடைக்கும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்களை நவீன கொத்தடிமைகளைப் போல நடத்துவது ஏற்புடையதல்ல என்றும், முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே இந்த அரசும் இந்த முறையைத் தொடர்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, அரசு இந்த தொகுப்பூதிய உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை சம்பளத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்துகிறது.
