புரட்சித் தலைவி அம்மாவின் படம் என் சட்டை பையில் உள்ளது. இதை அனுமதித்தவர் தவெக தலைவர் முதல்வர் விஜய் தான். அவர் என்னை அழைத்து, 'நீங்கள் அம்மா புகைப்படத்தை வைத்துக்கொள்ளுங்கள்.. அப்போது தான் எனக்கு மகிழ்ச்சி' என்றார். இப்படி வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் முதல்வர் விஜய். நான் துணிந்து சொல்கிறேன், அதிமுகவில் இருப்பவர்களால் இதை சொல்ல முடியுமா? என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
'துரோகம் அங்கேதான் இருக்கிறது! புரட்சித் தலைவி அம்மாவை 21 நாட்கள் சிறையில் வைத்தவர்களோடு கூட்டணி வைக்கலாம் என்ற சதிகாரர்கள் இருக்கிறார்களே… அதை தகர்த்தெறிய வேண்டுமா இல்லையா? தகர்த்தெறியும் சக்தியாகத்தான் இங்கே இவர்கள் இணைந்திருக்கிறார்கள். துரோகம் இங்கே இல்லை. அங்கேதான் இருக்கிறது. அதை இவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
வயதானவர்களை வைத்துக்கொண்டு நேற்று மகளிரணி கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஓடுகின்ற பாம்பை மிதிக்கும் பட்டாளம் இங்கு இருக்கிறது. தடுமாறுபவர்கள் அங்கே இருக்கிறார்கள் என இணைப்பு விழாவில் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டத்தை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன், 'எம்.ஜி.ஆர் வைத்திருந்தது இயக்கம். அம்மா வைத்திருந்தது இயக்கம். ஆனால், எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது கம்பெனி. கார்பரேட் கம்பெனி!' என்றும் சாடினார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ., இருந்தவரை தான் அதிமுக கட்சி. ஈபிஎஸ்.,யிடம் இருப்பது கார்ப்பரேட் கம்பெனி. 10 பேர், அவருக்கு பின்னால் இருக்கிறார்கள். திமுக ஆதரவோடு ஈபிஎஸ் முதல்வராக நினைத்தது துரோகம். அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட என்னை தாங்கியது தவெக. நல்ல தலைமையை ஏற்று தவெகவில் இணைகின்றனர். தவெகவுக்கு வந்தவர்களை வரவேற்கிறேன்' என அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.