ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் 'பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா மற்றும் கருத்தரங்கம்' ஞாயிறன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், 6 மாநிலங்களைச் சேர்ந்த 9 முன்னோடி விவசாயிகள் 'விதை பாதுகாவலர் விருதுகள் – 2026' பெற்று கௌரவிக்கப்பட்டனர்.
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் விருதுகளை வழங்கி பேசுகையில், கல்வி மற்றும் ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு வார விடுமுறை இருந்தாலும், விவசாயிகள் 24 மணி நேரமும் விடுப்பின்றி உழைக்கின்றனர். ஒரே பயிரை நம்பி இருக்காமல், காலத்திற்கும் மண்ணிற்கும் ஏற்ற பயிர்களைப் பயிர் சுழற்சி முறையில் பயிரிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சிறப்புரையாற்றிய மரபின் மைந்தன் முத்தையா, தரமான விதைகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் ஈஷாவின் இந்த முயற்சி, தரமான மாணவர்களை உருவாக்கும் வி.ஐ.டி வளாகத்தில் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிட்டார். கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் செலவைக் குறைத்து லாபம் ஈட்டும் வழிகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றினர். 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த இந்த பிரம்மாண்ட கண்காட்சியில், 2000க்கும் மேற்பட்ட அரிய பாரம்பரிய விதை ரகங்கள், கிழங்கு வகைகள் மற்றும் இயற்கை விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் மோகன் மற்றும் யுவராஜ், சேலத்தைச் சேர்ந்த சரவணன், ஹரியானாவைச் சேர்ந்த லாலு ராஜேஷ் குஹார், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனில் கவாலி, குஜராத்தைச் சேர்ந்த ஹமீர்பாய் பைரயா, கேரளாவைச் சேர்ந்த நிஜாமுதீன் மற்றும் முகமது நாசிர் பாப் புட்டி, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தூல் குமார் ரெட்டி ஆகிய 9 பேருக்கு விதை பாதுகாவலர் விருதுகள் வழங்கப்பட்டன.