இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமாக உள்ளதை ஒட்டி, இந்தியா – அயர்லாந்து இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு வரலாறு காணாத வகையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மைதானத்தில் கூடுதல் இருக்கைகளை அமைக்க அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.
அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஸ்டோர்மாண்ட் மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் 15 வயது 91 நாட்களே ஆன வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினால், இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதிக்கும் மிக இளைய வீரர் என்ற புதிய சாதனையைப் படைப்பார். இந்த வரலாற்று நிகழ்வைக் காண பாரிஸ் உள்ளிட்ட ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் பெல்ஃபாஸ்ட் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஸ்டோர்மாண்ட் மைதானத்தில் 7,000 இருக்கைகள் மட்டுமே உள்ளதால் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.
இது குறித்து இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்காக விளையாடிய முன்னாள் வீரரான எம்.வி.நரசிம்ம ராவ் கூறுகையில், 'இந்த மைதானத்தில் 7,000 இருக்கைகள் மட்டுமே உள்ளன. ஆனால் பாரிஸ் போன்ற ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வைபவ்வின் ஆட்டத்தைக் காண வரத் துடிப்பதால், கூடுதல் இருக்கைகளை அமைக்க உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்தில் அறிமுகமாவது இங்குள்ள ரசிகர்களுக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிட்ச் நிலைமைகள் குறித்துப் பேசிய அவர், அயர்லாந்து மைதானங்கள் பொதுவாக மெதுவானவை மற்றும் இங்கு அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததால் வைபவ் சூர்யவன்ஷிக்கு இது சாதகமாக இருக்கும். ஆனால், இங்கிலாந்துக்குச் செல்லும்போது தான் அவருக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது. அங்கு பந்து நன்றாக ஸ்விங் ஆகும், அத்துடன் வானிலையும் அடிக்கடி மாறும். அந்த சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே முக்கியம் என்று எச்சரித்துள்ளார்.