விவசாயிகளின் உழைப்பில் விளைந்த நெல் மூட்டைகள், அரசின் அலட்சியத்தால் மழை நீரில் நனைந்து வீணாவது தொடர்கதையாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். த.வெ.க. அரசின் திறந்தவெளி கிடங்குகளில் நெல் மூட்டைகள் முறையாக பாதுகாக்கப்படாமல் முளைவிட்டு வீணாவதை வேடிக்கை பார்க்கும் இந்த அரசுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில் எப்படி நெல் மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் வீணானதோ, அதே நிலை தற்போதைய த.வெ.க. ஆட்சியிலும் தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நெல் கொள்முதல் கிடங்குகளுக்கு குடோன்கள் இல்லாதது மட்டுமல்லாமல், நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்ப்பாய்கள் கூட இல்லாத அவலம் நீடிப்பதாக அவர் வேதனை தெரிவித்தார். ஓரிரு நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக செய்திகள் வந்துள்ளன.
ஸ்ரீபெரும்புதூர், ராமானுஜபுரம், விருதுநகர், ராணிப்பேட்டை போன்ற இடங்களிலும் முறையான பாதுகாப்பு மற்றும் தார்ப்பாய் வசதி இல்லாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பாமல் பல மாதங்களாகத் தேக்கி வைப்பதும், போதிய தார்ப்பாய்கள் இல்லாததுமே இதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லின் தரம் குறைந்து, விற்பனை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொள்முதல் நிலைய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை த.வெ.க. அமைச்சர்கள் இருவர் பார்வையிட்டதாக செய்திகள் வந்தாலும், அமைச்சர்கள் பார்வையிடுவதால் மட்டுமே விவசாயிகளின் குறைகள் தீர்ந்துவிடாது என்றும் அவர் கூறினார். அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளைப் பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக குடோன்கள் அமைக்க வேண்டும் என்றும், அதுவரை போதுமான தார்ப்பாய்களை கொள்முதல் செய்து நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், நிதி நிலையைக் காரணம் காட்டி குடோன்கள் அமைக்கும் பணியை தள்ளிப்போடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.