தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 5 புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தூய்மையான மற்றும் மக்கள் விரும்பும் ஆட்சியை வழங்கும் அரசின் உயரிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான சேவைகளை வழங்கவும் முக்கிய நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் பொருட்டு, ஏற்கனவே செயல்பட்டு வந்த உடுமலைப்பேட்டை மற்றும் திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (NCES) வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு கைவிடப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய மண்டலங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முதலீடுகளை ஈர்ப்பதற்கும், திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் பசுமை எரிசக்தி இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.