2008 ஐபிஎல் தொடரின் ஸ்லாப்கேட் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹர்பஜன் சிங் நடித்த விளம்பரம், ஸ்ரீசாந்துக்கும் ஹர்பஜனுக்கும் இடையிலான பழைய பகை மீண்டும் வெடிக்கக் காரணமாகியுள்ளது. இது குறித்து தி லல்லன்தொப் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய ஸ்ரீசாந்த், ஹர்பஜனுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
ஹர்பஜன் சிங் நடித்த விளம்பரத்தைப் பார்த்த பிறகு, பழைய பகை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். நேர்காணலில், ஹர்பஜனும் தானும் பாக்ஸிங் உடையில் இருக்கும் பழைய புகைப்படத்தைக் காட்டியபோது, ஸ்ரீசாந்த் ஆவேசமாகப் பேசினார். "அந்த விளம்பரம் வேண்டாம், நேரடி மோதலுக்கு வாருங்கள். நிஜத்தில் இதைச் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்னுடன் பாக்ஸிங் ரிங்குக்குள் வர உங்களுக்கு துணிச்சல் உள்ளதா? ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வர முடியுமா?" என்று ஹர்பஜனிடம் நேரடியாகக் கேட்டார்.
மேலும், "அதே கையுறைகளை அணிந்து என்னுடன் மோத உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இது நடிப்பு அல்ல. உங்களால் சிரிக்கக் கூட முடியவில்லை. யார் என்று பார்த்துவிடுவோம். இது உங்களுக்கு நான் விடுக்கும் நேரடி சவால்!" என்று ஸ்ரீசாந்த் கூறினார். பேயர் நக்கிள் ஃபைட் லீக் (Bare Knuckle Fight League) தொடரில் இணைந்துள்ளதாகவும், அதன் விளம்பரப் பணிகளில் நண்பர் மூலம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"பாஜி, நான் உங்களைத்தான் சவாலுக்கு அழைக்கிறேன். அந்த அறைந்த சம்பவத்தாலும் என்னாலும் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்றால், அதன் மூலம் நீங்கள் இவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்றால்… நானும் கொஞ்சம் சம்பாதிக்கிறேன், ரிங்குக்குள் வாருங்கள். நமது சுயமரியாதையை மனதில் கொண்டு, விளம்பரங்கள் செய்வதைத் தவிர்த்துவிட்டு களத்திற்கு வாருங்கள். அனைத்து மலையாளிகள் மற்றும் சர்தார்களின் சார்பாக நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்," என்று ஸ்ரீசாந்த் ஆவேசமாக அழைப்பு விடுத்தார்.