தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மகேந்திரன், நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ளார். நீண்டகாலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் மகேந்திரன். இவர் 1971ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக செயல்பட்டு வந்துள்ளார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டதன் மூலம் மகேந்திரன் பரவலாக அறியப்பட்டார். தற்போது, சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அவர் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தவெகவில் இணைந்த பிறகு மகேந்திரன் உரையாற்றுகையில், 'காசு செலவழிக்காமல் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஒரு புரட்சியை செய்துள்ளது. பொதுவுடைமை சித்தாந்தத்தின் வேர்களை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். சிவப்பு துண்டுடன் தவெகவில் செயல்பட ஆசைப்படுகிறேன். இந்த தேர்தலில் சாதிமுறைகள் தோற்கடிக்கப்பட்டிருப்பதை கண்டு வியக்கிறேன். தவெக ஒரு பெரிய இயக்கமாக வளர்வதற்கான விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தல் மூலம் தவெக சாதியை ஒழித்துக்கட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் மக்களுக்கு தந்துள்ளார்' என்று தெரிவித்தார்.