தவெக அரசு தயாரித்த ஆளுநரின் உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம் போன்றது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மாநில உரிமை, பெண்கள் நலன், சமூக நீதி, சமவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், திருநங்கையர் மற்றும் சிறுபான்மையினர் நலன், கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆட்சி என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரை அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
'மக்களே நாட்டின் உண்மையான எஜமானர்கள்' என்ற அண்ணாவின் வரிகளுடன் தொடங்கிய ஆளுநர் உரையில், பொதுத் தொடர்பு மொழி குறித்த வாதத்தை மறைத்து, இருமொழிக் கொள்கையே தொடரும் என அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்குத் தடையை ஏற்படுத்தும் என தினகரன் சுட்டிக்காட்டினார். தேசிய கல்விக் கொள்கையை ஆராயாமல் எதிர்ப்பதும் கேள்விகுரியாக்கியுள்ளது. மேலும், மாணவர்களின் எதிர்கால நலன், தமிழை வழக்காடு மொழியாக்குதல், சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைத்தல், கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு, நதிகள் இணைப்பு போன்ற முக்கிய விஷயங்களில் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், கடந்த கால ஆளுநர் உரையின் விவரங்களை 'Cut, Copy, Paste' செய்தது வழக்கமான சம்பிரதாய நடவடிக்கை என விமர்சித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதையும், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதையும் கண்டிக்க முடியாமல் இருப்பதன் மூலம், மாநில உரிமையையும் விவசாயிகளின் நலனையும் தாண்டி, காங்கிரஸ் கட்சி மீதான தவெகவின் விசுவாசம் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதாக தினகரன் குற்றம் சாட்டினார். கொத்துக் கொத்தாக நடக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடக்கும் நிலையில், 'பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுமே இந்த அரசின் லட்சியம்' என ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கேலிக்கூத்தானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்து சமூக மக்களுக்கும் உரிய வாய்ப்பு கிடைத்திடவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அழுத்தத்தின் அடிப்படையில், தவெக அரசு சமூகநீதி சர்வே நடத்த முன்வந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக தினகரன் தெரிவித்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய், ஆறு சிலிண்டர், தாலிக்குத் தங்கம், பட்டுச் சேலை, பெண்கள் நீதிமன்றங்கள், பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் தங்க மோதிரத் திட்டம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றுவதற்கான உத்தரவாதமோ செயல்திட்டமோ ஆளுநர் அறிக்கையில் இடம்பெறாமல் போனது மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை தந்திருப்பதாகக் கூறினார். தமிழகத்தின் நிதிநிலையைச் சீரமைத்த பின்னர்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்றால், தேர்தலுக்கு முன்பே மக்களை ஏமாற்றும் நோக்கில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இறுதியாக, 1967 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் நிகழ்த்திய ஆட்சி மாற்றத்தை வெறும் ஒப்பீட்டளவில் பேசாமல், அந்த இருபெரும் தலைவர்கள் நிகழ்த்திய சாதனைகளையும், தமிழக மக்களுக்குக் கொடுத்த நல்லாட்சியையும் பின்பற்றிட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு அறிவுறுத்தும் இந்நேரத்தில், இன்றைய ஆளுநர் உரை தங்க முலாம் பூசிய தகரமாகவே இருந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.