2027 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 20வது சீசன், கோடை வெயிலையும், முன்கூட்டியே தொடங்கும் பருவமழையையும் தவிர்க்கும் நோக்கில், வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கப்படலாம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28 முதல் மே 31 வரை நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இருப்பினும், மே மாத இறுதியில் நிலவும் கடுமையான வெயில் மற்றும் முன்கூட்டியே தொடங்கும் பருவமழை காரணமாக போட்டிகளை நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, 'மே 15ஆம் தேதிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, சில மாநிலங்களில் பருவமழையும் தொடங்கிவிடுகிறது. இது மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கும், விளையாடும் வீரர்களுக்கும் உகந்தது அல்ல. எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் 2027 தொடரை மார்ச் 10ஆம் தேதி தொடங்கி, மே 15ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஆளும் குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது' என்றார்.
ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை 74ல் இருந்து 94 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டாக தகவல் பரவி வரும் நிலையில், அது குறித்த கேள்விக்கு பதிலளித்த சைகியா, 'தற்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை' என்றார். சர்வதேச கிரிக்கெட் அட்டவணை ஏற்கனவே மிகவும் நெரிசலாக இருப்பதால், ஐபிஎல் தொடருக்கு இரண்டு மாத கால அவகாசம் கிடைப்பதே கடினமாக உள்ளது. மற்ற நாடுகளின் இருதரப்பு போட்டிகளைக் கருத்தில் கொண்டு, உடனடியாக போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரின் போது தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டாலும், ஜியோஸ்டார் ஸ்ட்ரீமிங் மூலம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை சுட்டிக்காட்டி பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், சமூக வலைதளங்களில் ஐபிஎல் மீதான ஆர்வம் முன்பு போல் இல்லை என்பதை உணர முடிகிறது. இந்தச் சூழலில் தான் பிசிசிஐ ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்தவும், போட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருக்கவும் திட்டமிட்டுள்ளது.