தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரு புதிய உதயம் தோன்றியுள்ளது என ஆளுநர் ரிலேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டமன்றத்தில் ஆளுநரின் முழு உரை எந்தவித இடையூறும் இன்றி வாசிக்கப்பட்டதில் மனநிறைவு அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், முதல் முறையாக சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இது மாநில அரசுக்கும் மக்களாட்சி மாளிகைக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாகவும், மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டுவதாகவும் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில், ஆளப்படும் ஆட்சியானது அனைத்து தரப்பிலும் ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதையே ஒரு முன்மாதிரியான அரசின் நோக்கமாகக் கொள்ள வேண்டும். இந்த இலக்கை நோக்கி அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது என்றும் ஆளுநர் அர்லேகர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.