தமிழகத்தில் 8ஆம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் இத்திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு அறிக்கையில் உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், தத்தெடுக்கும் மையங்கள், உதவி எண்கள், குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டங்களை பயனாளர்களிடம் தடையின்றி கொண்டு சேர்க்கவும், குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை' 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்யுமாறு துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி இத்திட்டத்தினை முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.