மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி பேசும்போது, அவர்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய ராகவா லாரன்ஸ், 'தெருநாய்களுக்கு கூட அவற்றிற்கு பிடித்த உணவை கொடுக்க வேண்டும். அதே போன்று மக்களுக்கு தேவையானதை அறிந்து செய்ய கால அவகாசம் தேவை' என்று குறிப்பிட்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் செயல்பாடுகள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
'முதலமைச்சருக்கு ஆதரவாக பேசியதால் என்னை விமர்சிப்பார்கள். களத்திற்கு ஏற்ற மாதிரி விளையாட நான் தயாராக இருக்கிறேன். கல்வித்துறை, அறநிலையத்துறை அமைச்சரின் நடவடிக்கைகள் பிடித்துள்ளது. அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கால அவகாசம் தேவைப்படுகிறது. மாற்றம் வேண்டும் என்று கேட்கிறீர்கள்; ஆனால், அதற்கான நேரம் கொடுக்க மாட்டீர்களா?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சிப்பது பொறாமைதான் காரணம் என்றும், நாம் என்ன செய்தோம் என்பதை யோசித்து பார்த்துவிட்டு விமர்சனம் வைக்க வேண்டும் என்றும் ராகவா லாரன்ஸ் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்துடன் வருகிறேனா என்பது எல்லாம் சஸ்பென்ஸ் என்றும், ஒரு சில போன் கால்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஆசியோடு தான் அனைத்து விஷயங்களையும் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.