வடகிழக்கு மாநிலமான அசாமில், பா.ஜ.க. தலைமையிலான மாநில அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை வழங்கப்படாது என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார். சட்டவிரோத ஊடுருவல் மற்றும் இடைக்கால பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 'அசாமில் இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட மாட்டாது. விதிவிலக்கான சூழல்களில், சம்பந்தப்பட்ட மாவட்ட கமிஷனர் மாநில அரசுக்கு பரிந்துரை அனுப்பினால், விண்ணப்பதாரரின் தகுதியை ஆராய்ந்து மாநில அரசு ஆதார் அட்டை வழங்கும்' என்று தெரிவித்தார்.
மாநிலத்தின் சில மாவட்டங்களில், ஆதார் அட்டை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான அட்டைகள் யாரிடம் உள்ளன என்பதை கண்டறிய வேண்டியது அவசியம். வங்கதேசத்திலிருந்து வரும் சட்டவிரோத குடியேறிகள் ஆதார் அட்டையை பெறுவதை தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து ஆதார் அட்டைகள் வழங்கப்படும் என்றும், ஏனெனில் அவர்களில் பலர் இன்னும் ஆதார் அட்டை பெறவில்லை என்றும் முதல்வர் கூறினார். இந்த விதிவிலக்கு 2027 ஏப்ரல் 1 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்றும், அதன்பிறகு அவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படாது என்றும், 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.