தமிழகத்தில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'தமிழக முதல்வரே, மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்?' என்று குறிப்பிட்டுள்ளார்.
தவெக அரசால் 'மூடப்பட்டதாக' அறிவிக்கப்பட்ட பல டாஸ்மாக் கடைகள் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் வருவதாகவும், இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, டாஸ்மாக் கடைகள் தொடர்பான கோப்பு நிலுவையில் உள்ளது என கூறி பட்டியலை வெளியிடாமல் சப்பைக் கட்டு கட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
'ஊனால் ஆய்வு', 'முறுக்கு பாக்கெட்டின் உற்பத்தி தேதிக்கு ஆதாரம் கேட்பது' என 'விஞ்ஞான' ரீதியாக ஆட்சி செய்யும் தவெக ஆட்சியாளர்கள், டாஸ்மாக் கடைகள் மூடல் விஷயத்தில் மட்டும் ஏன் வெள்ளை அறிக்கை வெளியிட தயங்குகிறார்கள்? 'மடியில் கனமில்லையெனில் பயமேன்?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
'தூய சக்தி' என முழங்கிவிட்டு, உண்மையை வெளியிடத் தயங்குவது சரியல்ல என்றும், எனவே, காலந்தாழ்த்துவதை விடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை முகவரியுடன் தெளிவாக பட்டியலிட்டு, ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என முதல்வர் விஜய் அவர்களை மீண்டும் வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.