தமிழகத்தில் உள்ள குறு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகள் மூலம் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, ரூ.50,000 வரை பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி.காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என்.மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற நடைமுறையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், கடன் தொகை ரூ.50,000 வரை இருந்தால், குறு விவசாயிகளுக்கு முழு கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்படும். சிறு விவசாயிகளுக்கு அதே கடன் தொகைக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படும். மேலும், கடன் தொகை ரூ.50,001 முதல் ரூ.1 லட்சம் வரை மற்றும் அதற்கு மேல் உள்ள தொகைகளுக்கும் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ.5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தால், 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.