புதுடெல்லி: ஈரான்-இஸ்ரேல் இடையே நீடிக்கும் மோதல் காரணமாக, உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022 ஏப்ரல் முதல் நான்கு ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், மே 15 ஆம் தேதி திடீரென விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 15, 19, 23 மற்றும் இன்று (மே 25) என நான்கு முறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.20-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7.38-ம் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.77 ஆகவும், டீசல் ரூ. 99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டதாவது: 'பணவீக்க நாயகன் பிரதமர் மோடியின் அதிரடி தொடர்கிறது. விலையேற்றத்தில் பொருளாதாரப் புயல் வீசும் என்று நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன். ஆனால் மோடி, வழக்கம் போல் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்தார். தேர்தல்கள் முடிந்த உடனேயே, பெட்ரோல்-டீசல் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பணவீக்க நாயகன் மோடி மீண்டும் தன் கைவரிசையைக் காட்டுகிறார்.'
மேலும் அவர், 'பெட்ரோல், டீசல் விலைகளை மோடி அரசு தவணை முறையில் உயர்த்தி வருகிறது. மக்களின் பாக்கெட் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து சுரண்டப்படுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி தருவதும், பிறகு பாக்கெட்டை சுரண்டுவதுமே பணவீக்க நாயகனின் வேலை' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான்-இஸ்ரேல் மோதலால் ஏற்பட்ட உலகளாவிய பாதிப்புகளுக்கு மத்தியில், உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.