கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் தலைமையிலான குழுவினர், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் காமினி மேற்பார்வையில் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 23-ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தலைமைச் செயலாளரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் (POSH) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜாமின் கோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினரான அருள் விக்னேஷை, கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரைத் துடைக்கும் வகையில் பதவியை ராஜினாமா செய்ய கட்சித் தலைமை அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், 'நான் எந்தத் தவறும் செய்யவில்லை' என்று கூறி, அவர் ராஜினாமா செய்ய மறுப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
