சென்னை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ஆலோசகராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். 2027 ஐபிஎல் தொடர் முதல் அவர் இந்த புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். இதன் மூலம், ஒரு வீரராக கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும், சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து பயணிக்க உள்ளார்.
இந்த நியமனம் குறித்து சிஎஸ்கே உரிமையாளர் என். சீனிவாசன் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்தார். 'தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிகள், சவால்கள் என அனைத்திலும் நாங்கள் ஒன்றாகப் பயணித்துள்ளோம். பரஸ்பர நம்பிக்கைதான் இந்த நீண்ட பயணத்திற்கு முக்கிய காரணம். 2008ல் தோனியை அணியில் எடுத்தது நான் எடுத்த மிகச் சிறந்த முடிவுகளில் ஒன்று. சிஎஸ்கே அணியின் அடையாளமாக அவர் எப்போதும் இருப்பார். இது எப்போதும் அவருடைய வீடுதான்' என்று அவர் குறிப்பிட்டார்.
அணியின் மற்றொரு உரிமையாளர் ரூபா குருநாத் பேசுகையில், 'தோனி போன்ற ஒரு வீரர் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைப்பார். அவரது தலைமைப் பண்பு, அர்ப்பணிப்பு, ரசிகர்களுடனான தொடர்பு என மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. தற்போது சிஎஸ்கே அணி ஒரு மாற்றத்தை நோக்கி நகரும் இந்த சூழலில், அவரது வழிகாட்டுதல் இளம் வீரர்களுக்கு மிக முக்கியமானது. தொடர்ந்து ஆலோசகராக அவர் அணியுடன் பயணிப்பார்' என்று தெரிவித்தார்.
சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், 'மஞ்சள் நிற ஜெர்சியில் தோனியை மைதானத்தில் இனி பார்க்க முடியாது என்பது சற்று ஏமாற்றம் அளித்தாலும், ஆலோசகராக அவர் வீரர்களை தொடர்ந்து வழிநடத்துவார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என்றார்.
கேப்டனாக சிஎஸ்கே அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று தந்த பெருமை தோனிக்கு உண்டு. ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற கேப்டன்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணிக்காக அதிகபட்சமாக 272 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 5,314 ரன்களைக் குவித்து, அணியின் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரராகவும் திகழ்கிறார். கடைசி பந்து வரை ஆட்டத்தை மாற்றும் திறன், அவரது புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட்கள், மின்னல் வேக ஸ்டம்பிங் மற்றும் அமைதியான கேப்டன்ஷிப் மூலம் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
வீரராக அவர் ஓய்வு பெற்றாலும், ஆலோசகராக அணியை வழிநடத்தவுள்ளதால், ரசிகர்கள் தங்களின் அன்புக்குரிய 'தல' தோனியை மீண்டும் சிஎஸ்கே அணியின் பாசறையிலேயே தொடர்ந்து காணலாம். இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
(குறிப்பு: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 2 முறை பர்பிள் கேப் வென்ற பவுலரை 4 கோடிக்கு விற்று குஜராத் அணிக்கு மாற்றியுள்ளது.)
