திமுக ஆட்சியின் போது ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்காதது ஏன் என்று எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீரமணி வழக்கில் யார் மீது ஆதாரம் உள்ளதோ, யார் பணம் பறித்தார்களோ அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டிலேயே ஜெம் வீரமணி மீது காவல் துறையிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், உளவுத்துறை அதிகாரிகள் ஜெம் வீரமணி குறித்த தகவல்களை அப்போதைய முதலமைச்சராக இருந்த ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார்களா இல்லையா என்பது குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெம் வீரமணி ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்த பின்னரும், திமுக ஆட்சியில் அதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஏன் அமைக்கப்படவில்லை என்றும் அவர் வினவியுள்ளார். திமுக ஆட்சியில் ஜெம் வீரமணியிடம் பேரம் பேசியும், கட்டப்பஞ்சாயத்து செய்தும் சுமார் 500 கோடி ரூபாய் வரை பணம் பறிக்கப்பட்டதாக புகார்கள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இதுகுறித்து என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை அமைச்சர் நிர்மல் குமார் எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
