வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை மேற்பாராலை தேயிலைத் தோட்டப் பகுதியில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது 5 வயது மகனை சிறுத்தை கவ்விச் சென்றபோது, தாய் நாகஜோதி துணிச்சலுடன் போராடி அவரை மீட்டெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருசாமி மற்றும் நாகஜோதி தம்பதியினரின் 5 வயது மகன் தீக்சிதன், கடந்த வியாழக்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் பள்ளியிலிருந்து வீடு திரும்பியுள்ளார். வழக்கம்போல் தனது தாயின் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த தேயிலைப் புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து சிறுவனைத் தூக்கிக்கொண்டு தேயிலைத் தோட்டத்திற்குள் ஓடியது.
கண் முன்னே மகன் சிறுத்தையின் பிடியில் சிக்கியதைக் கண்ட தாய் நாகஜோதி, சிறிதும் அச்சமடையாமல் அலறியடித்தபடி சிறுத்தையைத் துரத்திச் சென்றார். சுமார் 100 அடி தூரத்திற்கும் மேலாக சிறுத்தையைப் பின்தொடர்ந்த அவர், மரக்கட்டைகளை வீசியும், உரத்த குரலில் கத்தியும் தைரியமாகப் போராடினார். தாயின் தொடர் கூச்சலாலும், விடாப்பிடியான துரத்தலாலும் பயந்துபோன சிறுத்தை, சிறுவனை தேயிலைத் தோட்டத்திற்குள் போட்டுவிட்டு அடர்ந்த புதருக்குள் ஓடி மறைந்தது.
சிறுத்தையின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட தீக்சிதனுக்கு காது மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அப்பகுதி மக்களின் உதவியுடன் சிறுவன் உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டப் குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. சிறுத்தையைப் பிடிக்க உடனடியாக கூண்டு வைக்க வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தன்னுடைய உயிரைப் பொருட்படுத்தாமல், துணிச்சலுடன் சிறுத்தையிடம் போராடி மகனை மீட்ட தாய் நாகஜோதியின் வீரத்தையும் தைரியத்தையும் வனத்துறையினரும், பொதுமக்களும் மனதாரப் பாராட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
