இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் சுப்மன் கில்லை மிகவும் அதிர்ஷ்டசாலியாக வர்ணித்துள்ளார். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவருக்கு வழிகாட்ட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது ஒரு பெரிய பலம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அணியில் வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற கடினமான முடிவுகளை எடுப்பதில் சுப்மன் கில்லுக்கு இந்த மூத்த வீரர்கள் பெரிதும் உதவுவார்கள் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்டில் கம்பீர் மற்றும் கில்லின் கூட்டணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, அவரும் கோலியும் உலகக் கோப்பை வரை தொடர்ந்து விளையாடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் அணியின் முன்வரிசை பேட்டிங்கிற்கு வலுவான அடித்தளமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய கம்பீர், 'ஒருநாள் போட்டிகளில், சுப்மன் கில் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், அவருக்கு மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உதவ ரோஹித் மற்றும் விராட் போன்ற சீனியர் வீரர்கள் இருக்கிறார்கள்' என்று கூறினார். மேலும், இந்திய கிரிக்கெட்டில் விளையாடும் லெவனில் இருந்து யாரையாவது நீக்குவது எப்போதுமே கடினமான காரியம். ஒரு இளம் கேப்டனாக அந்த முடிவை எடுப்பது இன்னும் சவாலானது. ஆனால், கில் இதுவரை அதை சிறப்பாகச் செய்துள்ளார் என்றும் அவர் பாராட்டினார்.
சுப்மன் கில் கேப்டனாக வழிநடத்திய 12 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் தோல்விகளையும் சந்தித்துள்ளது.
இது குறித்துப் பேசிய கம்பீர், 'அவர் சரியான வழியில்தான் செயல்படுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு இது சற்றே சவாலான காலமாக இருந்தாலும், அவர் எல்லாவற்றையும் சரியாகச் செய்வதால் நிச்சயம் நிலைமை விரைவில் மாறும் என்று நான் நம்புகிறேன்' என்றார்.
இந்த மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் மூலம் இந்திய அணி உலககோப்பைக்கான பயிற்சியை தொடங்குகிறது. இந்தத் தொடர்கள் சுப்மன் கில்லின் கேப்டன்சிக்கு ஒரு முக்கிய சோதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
