அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்திய நிலையிலும், வெறும் 4 நாட்களிலேயே மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்பிய அமைச்சர் கீர்த்தனா அவர்களின் அர்ப்பணிப்பை கனிமொழி சந்தோஷ் மனதாரப் பாராட்டியுள்ளார். ஒரு பெண்ணாகவும், ஒரு சகோதரியாகவும் இதை நேரில் பார்த்ததால் சொல்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை படுக்கையில் இருந்தபோதும், முதலமைச்சரின் லண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகள் சரியாக நடைபெறுகிறதா என்பதில் அமைச்சர் கீர்த்தனாவின் கவனம் இருந்ததை கனிமொழி சந்தோஷ் சுட்டிக்காட்டினார். ஆனால், அவர் சில நாட்கள் பணிக்கு வராததைப் பற்றி பேசும்போது, அவரது உடல்நிலை, காயம் குறித்து சிந்திக்காமல் அதை மாதவிடாயுடன் தொடர்புபடுத்தும் பிற்போக்குத்தனமான சிந்தனை வேதனை அளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
பெண்கள் அவர்களின் உடல் சுழற்சியால் மட்டும் வரையறுக்கப்படுபவர்கள் அல்ல என்றும், அவர்கள் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், தாய்கள், மகள்கள் என்றும் கனிமொழி சந்தோஷ் வலியுறுத்தினார். வலி, நோய், காயம் என அனைத்தையும் கடந்து கடமையைத் தொடர்ந்து செய்பவர்கள் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு பெண்ணின் பணியை விமர்சிக்க முடியாதபோது, அவரது உடலைப் பற்றி பேசுவது அரசியல் விமர்சனம் அல்ல; அது பிற்போக்குத்தனமான மனநிலையின் வெளிப்பாடு என்று கனிமொழி சந்தோஷ் கடுமையாக சாடினார். பெண்களை அவர்களின் சாதனைகளுக்காக மதிப்போம் என்றும், அவர்களின் உடலை அரசியல் கேலிக்குரிய பொருளாக மாற்றுவதை நிறுத்துவோம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பெண்கள் இதைவிட சிறந்த மரியாதைக்கு உரியவர்கள் என்றும், தமிழ்நாடும் இதைவிட சிறந்த அரசியல் பண்பாட்டுக்கு உரியது என்றும் கனிமொழி சந்தோஷ் தனது கருத்தை பதிவு செய்தார்.
அமைச்சர் கீர்த்தனா, தனது உடல்நிலை குறித்த தகவலை ரகசியமாக வைத்திருக்க விரும்பியிருக்கலாம் என்றும், ஆனால் அவரது அர்ப்பணிப்பை பார்த்த ஒரு சகோதரியாக இதை சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருந்ததாகவும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார். கீர்த்தனாவின் இந்த அர்ப்பணிப்பு பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
