மக்களுக்கு எதிரான செயல்பாடுகளில் த.வெ.க அரசு ஈடுபட்டால் நிச்சயம் கேள்வி கேட்போம் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், த.வெ.க ஆட்சிக்கு இடதுசாரிகள் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கவில்லை என்றும், மக்களுக்கு எதிராக அரசு செயல்பட்டால் கேள்வி எழுப்புவோம் என்றும் திட்டவட்டமாக கூறினார். 'இந்த அரசாங்கம் என்ன செய்தாலும் ஆதரிப்போம்' என்ற வாக்குறுதியை நாங்கள் கொடுக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஜெம் வீரமணி, ஜெயலலிதா ஆட்சியிலும், ஸ்டாலின் ஆட்சியிலும் தப்பித்துள்ளார் என்றும், ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டும், முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும் சண்முகம் குற்றம் சாட்டினார்.
எனவே, அனைத்து புகார்களையும் விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இந்த குற்றத்தை மூடி மறைக்க உதவிய காவல்துறை அதிகாரிகள், அன்றைய ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் கொடுத்தவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து, யார் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து, விரிவான விசாரணை நடத்தி அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காவல் துறையினருக்கு அழுத்தம் கொடுத்த முன்னாள் ஆளுங்கட்சியினர் யார் என்றும், ஸ்டாலின் முதல்வராக இருந்த போதும் வீரமணி தப்பித்துள்ளார் என்றும், வீரமணியை தப்பிக்க வைத்தது யார் என்றும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அழுத்தம் கொடுத்தது யார் என்றும் பெ.சண்முகம் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
