2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: தேதிகள் அறிவிப்பு!

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ESPNCricinfo வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த மாபெரும் தொடர் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகளால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள புளூம்ஃபொன்டெய்ன், கேப் டவுன், செஞ்சூரியன், டர்பன், ஈஸ்ட் லண்டன், க்கெபெர்ஹா, ஜொஹன்னஸ்பர்க் மற்றும் பார்ல் உள்ளிட்ட 8 மைதானங்களில் பெரும்பாலான போட்டிகள் நடைபெற உள்ளன. ஜிம்பாப்வேயில் 8 முதல் 10 போட்டிகளும், நமீபியாவில் 3 போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற International Cricket Council (ICC) நிர்வாகக் குழு கூட்டத்தில் போட்டித் தேதிகள் இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. மீதமுள்ள விவரங்கள் இந்த மாத இறுதியில் எடின்பர்கில் நடைபெறும் ஆண்டு பொதுக்குழு (AGM) கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 உலகக்கோப்பையில் மீண்டும் 14 அணிகள் பங்கேற்கும் வடிவம் அமல்படுத்தப்பட உள்ளது. அணிகள் தலா 7 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு தகுதி பெறும். அதன்பின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறும்.

2003 உலகக்கோப்பைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வேயும் இணைந்து உலகக்கோப்பையை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். அதேசமயம், நமீபியா முதல் முறையாக உலகக்கோப்பை போட்டிகளை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version