ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் இந்த டி20 அணியில், திலக் வர்மா, அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வைபவ் சூர்யவன்ஷி போன்ற பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆண்கள் கிரிக்கெட் பிரிவில், நடப்பு சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இதன் காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மட்டுமே சந்திக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச டி20 அந்தஸ்து பெற்ற இந்தப் போட்டிகளில், பெண்கள் தொடர் செப்டம்பர் 17 முதல் 22 வரையிலும், ஆண்கள் தொடர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் கிரிக்கெட் போட்டிகள் குழு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. குழு ஏ-வில் ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம் ஆகிய அணிகளும், குழு பி-யில் ஹாங்காங், மலேசியா, ஓமன் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றில் வெற்றி பெறும் நான்கு அணிகள், காலிறுதிப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் மோதும். இதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.
பெண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா – ஜப்பான், வங்கதேசம் – சீனா, இலங்கை – மலேசியா, பாகிஸ்தான் – தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய ஆண்கள் அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி.
இந்திய பெண்கள் அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், கமலினி, பாரதி புல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கௌத், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், நந்தினி சர்மா.

