மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்டங்கா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால் ஷேக், கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராமத்து குளத்திலேயே வசித்து வருகிறார். சில சமயங்களில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை நீரில் மூழ்கியிருக்கும் நிலையும் ஏற்படுகிறது.
தண்ணீரை விட்டு வெளியே வந்தால், உடல் முழுவதும் தாங்க முடியாத எரிச்சலும் வலியும் ஏற்படுவதாக சிறுவன் இக்பால் ஷேக் தெரிவித்துள்ளார். இந்த வலி காரணமாகவே அவர் நீரிலேயே வசிப்பதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததன் விளைவாக, அவரது கைகள், கால்கள் மற்றும் உடலின் பிற பாகங்களில் உள்ள தோல் வெளிறி, நீர் தேங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இக்பால் ஷேக்கிற்கு விடாப்பிடியான சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். கிராமவாசிகள் கொண்டுவரும் அவல், பிஸ்கட்டுகள் மற்றும் பிற தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவை உண்டு அவர் உயிர் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மருத்துவர்களின் முதற்கட்ட ஆய்வின்படி, இது 'எரித்ரோமெலால்ஜியா' போன்ற ஒரு அரிய நரம்பியல் நோய் அல்லது தோல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயின் தன்மை குறித்து மேலும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
சிறுவனின் இந்த அவல நிலைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு வசதி இல்லாததால், மேற்கு வங்க அரசு உடனடியாக இக்பால் ஷேக்கிற்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை தற்போது பரவலாக கவனத்தைப் பெற்றுள்ளது.
சிறுவன் தண்ணீரில் வசிக்கும் அதிசய நிகழ்வைக் காண, பள்ளிக்குழந்தைகள் உட்பட அப்பகுதி மக்கள் அதிகளவில் குளங்களைச் சுற்றி கூடி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்பால் ஷேக்கின் இந்த நிலை, விதி வசமா அல்லது சாபமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. உரிய மருத்துவ சிகிச்சை கிடைத்தால் அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து அரசு உரிய கவனம் செலுத்தும் என நம்பப்படுகிறது.

