இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திரையுலக பிரபலங்கள் பலரும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்', 'அலைகள் ஓய்வதில்லை', 'டிக் டிக் டிக்', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'வேதம் புதிது', 'கருத்தம்மா' உள்ளிட்ட பாரதிராஜாவின் படைப்புகளை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த பாரதிராஜா, தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளார்.

'இயக்குநர் இமயம்' பாரதிராஜா – 'இசைஞானி' இளையராஜா – 'கவிப்பேரரசு' வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் இன்றும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டு, ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்து வருகின்றன. அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்த தருணங்களை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், தற்போது நெஞ்சம் பாரமடைவதாகக் கூறியுள்ளார். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அஞ்சலி செலுத்தியபோது, பாரதிராஜா அவர்களின் உடலை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version